முன்னுரை:
உலக மொழிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகளை அலசி ஆய்ந்த சிறப்புடைய தெய்வத்திரு சாத்தூர் சேகரன் என்கிற பன்மொழிப் புலவர் இப்படிச் சொன்னார்.
“உலகில் உள்ள மொழிகள் இரண்டே! ஒன்று தூய தமிழ்; மற்றது திரிந்த தமிழ். காரணம், உலகின் பல்வேறு மொழிகளின் வேர்ச்சொற்களும் தமிழ் வேர்ச் சொற்களை அடிப்படையாக்க கொண்டே திரிந்திருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
இதனை எத்தனையோ சான்றுகளை அழைத்து வந்து பேச வைத்து எண்பிக்கலாம் (நிருபிக்கலாம்). எடுத்துக்காட்டாக கண் கூடான ஒரு சான்றைக் காட்டலாம். உலகில் எந்த மூலையில் எந்த மொழி பேசுபவராய் இருந்தாலும், தொலைபேசியை எடுத்தவுடனே, ஹலோ என்கிறாரே, அதுவே தமிழின் திரிவு என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? தமிழில் இன்றும் தென்னாட்டில், ஒருவரை ஒருவர் கூப்பிடும் போது, ஏலே! என்று விளிப்பதைப் பார்க்கலாம். ஆண்டாள் கூட எல்லே! இளங்கிளியே என்று பாடுகிறாள். இந்த எல்லே என்ற விளிச்சொல் தான் உலகமெல்லாம் ஹெல்லோ என்று திரிந்திருக்கிறது. ஆக உலக மொழிகள் மொத்தம் இரண்டே, ஒன்று தூய தமிழ்; மற்றது திரிந்த தமிழ் என்று மேற்படி பன்மொழிப் புலவர் கூறியது கண்கூடாக உறுதியாகும் உண்மை தானே!
ஆக, மேற்படி பன்மொழிப் புலவர் மேற்கண்ட கருத்தை சும்மா தெளித்து விடவில்லை. அவர்தாம் கற்றறிந்த இரு நூறுக்கும் மேற்பட்ட உலக மொழிகளின் சொற்களின் வேர்ச்சொற்களை ஆராய்ந்து அறுதியிட்டிருக்கிறார். இதனால் உலக மொழிகள் அனைத்திற்கும் மூலமொழி என்று கூறுவது ஆர்வச் சொல் அல்ல; நிறுவப்ட்ட இயற்கை உண்மைச் சொல்.
அதனால் தான் வள்ளலார் கூட தமிழ் மொழியை இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழி என்று எடுத்துரைத்தார்.
ஒரு முறை, வள்ளலார் அவர் காலத்தில் இருந்த காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களுக்கு வடமொழி வியாக்கியான இலக்கண நூலில் சந்தேகம் வந்தது. எங்கெங்கேயோ முயன்று இறுதியில் வள்ளலார் ஓதாதுணர்ந்த பெரியார் என்று கேள்விப்பட்டு, அவரை அணுகினாராம். அழைப்பின் பேரில், காஞ்சி மடத்துக்குச் சென்ற வள்ளலார் சங்கராச்சாரியார்க்கு இருந்த ஐயங்களைப் படீலென தெள்ளத்தெளிவாய் விளக்கி உதவினாராம்.
சங்கராச்சாரியார்க்கு ஒரே மகிழ்ச்சி! “அடடா! வடமொழி எத்துணை வளமானது பாருங்கள்! எனவே, உலமொழிகளுக் கெல்லாம் வடமொழியைத் தாய்மொழி என்று சொல்லலாம் இல்லையா!” என்றாராம். வள்ளலார், “தாராளமா சொல்லலாம்! ஆனால் உலகமொழிகளுக்கெல்லாம் தந்தை மொழி தமிழ்!” என்றாராம். இது அந்த மடத்து ஆம்நாயம் என்ற பதிவேடுகளிலேயே பதிவாகி இருக்கிறது என்று அறியக்கிடக்கிறது.
இந்தப் பதிவு மட்டுமன்று, வள்ளலாரின் சமகாலத்தில் அவர்க்குப் பின் வந்த இன்னொரு அருளாளரான பாம்பன் சுவாமிகளும் இந்த நிகழ்வின் உண்மைக்கு தனது பாடல் ஒன்றில் சான்றளித்து பதிவிட்டிருக்கிறார்.
வடமொழியைத் தேர்ந்தோர் வடமொழி தாயென்னில்
திடமொழியாம் தென்மொழியைத் தேர்ந்தோர் – புடவிதனில்
அத்தென் மொழிதந்தை யாமெனலும் கூடும் என் நல்
சுத்தனை ஏத்தென் துணிவு.
இங்கே, சுத்தன் என்றது சுத்த சன்மார்க்கி என அறியப்பட்ட வள்ளலாரை குறிக்கும்.
இப்படி தமிழின் உலக முன்மையை நிலைநாட்டிய வள்ளலார். “தமிழ்” என்ற ஒரு சொல்லுக்கே 17 பக்கம் விரிவுரை எழுதி இருக்கிறார். அதில் “தமிழ் ஒன்றே சிவாநுபூதியை எளிதில் அளிக்க வல்லது” என்று தமிழின் இறையருள் ஆற்றலை உலகறிய உரைத்திருக்கிறார்.
இத்தகைய இயற்கை உண்மை சிறப்பியல் இறைமலி, தமிழ் மொழிக்கு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே, ஒன்று ஈடென உரைக்கவொண்ணா ஒல்காப்புகழ் தொல்காப்பிய இலக்கண நூலை அளித்த பெருமை தொல்காப்பியர்க்கு மட்டுமே உண்டு. அவர் தமிழ்மொழி, இறைக்கோட்பாட்டை இயற்கையாகவே உள்ளடக்கிய மொழி என்று பல இடங்களில் தெரித்தும் உரித்தும் காட்டி இருக்கிறார்.
தொல்காப்பியம் உலகப் புகழ்பெற்ற ஒரு மொழி இலக்கண நூல். ஒருவர் அளவிறந்த புகழும், பெருமையும் பெற்றுவிட்டால், தம்முள் வேறுபடும் பலரும் அவரை சொந்தம் கொண்டாடுவது இயல்பு. அப்படித்தான் தொல்காப்பியரை பௌத்தரும், சமணரும், நாத்திகரும் இன்னும் பிற சமயத்தவரும் தமக்கு உரியவராக சித்தரிக்க முயன்றனர்; முயன்றும் வருகின்றனர்.
இப்படியொரு ஆபத்து திருவள்ளுவருக்கும் உண்டு. ஒரு அனுமன் பக்தர் வள்ளுவர் ஒரு ஆழ்ந்த அனுமன் வழிபாட்டினர் என்று அடித்துச் சொன்னார். எப்படி என்று கேட்டபோது, கடவுள் வாழ்த்தில் அவர் கடவுளை வாலறிவன் என்று பாடவில்லையா? வாலுள்ள கடவுள் அனுமன் தானே என்கிறார். இந்தக் கூத்திற்கு என்ன சொல்ல? புகழும் வேண்டும் தான்! ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கிற ஆபத்தைப் பாருங்கள்!.
தொல்காப்பியரை இப்படி நாளுக்கொரு முறையிலும் ஆளுக்கொரு முறையிலும் இழுத்தால் அவர் என்ன ஆவார், பாவம்! இந்த ஆபத்திலிருந்து தொல்காப்பியரை விடுவித்து அவர் ஒரு சமயம் கடந்த இறைக்கோட்பாட்டினர் என்று உண்மைத் தொல்காப்பியரை உலகிற்குப் படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்று நெடுநாட்களாக என் நினைவில் நிழலாடிக் கொண்டே வந்தது. அடியேன், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய முப்பெரும் உரையாசிரியர்களின் உரைகளில் ஆழ மூழ்கினேன்.
அதற்கு வாய்ப்பு எதிர்பாராத வகையில் திரு. இராமசாமி பல்கலைக் கழகத்தின் (எஸ்.ஆர்.எம்) ஒரு துறையான தமிழ்ப் பேராயத்தின் கூட்டத்தில் அடியேனுக்கு வாய்த்தது. அழைப்பின் பேரில் அடியேன் அநத்க் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, தொல்காப்பியத்தில் பன்முகச் சிறப்புகளைத் தனித்தனி நூலாக வெளியிடுவதைப் பற்றி கலந்தாய்வு நடந்தது. கூட்டத்தில், முதுபெரும் அறிஞர்களான மறைந்த தமிழண்ணல், இளங்குமரனார், கே.என்.கந்தசாமி இன்னும் பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பு அளிக்கப்பட்டு வரும் வேளையில்,“தொல்காப்பியத்தில் இறைக்கோட்பாடு” – [நூல் வெளியிட்டு விழா] என்ற தலைப்பில் நூலெழுத வாய்ப்பு அடியேனுக்கு கிட்டியது. அதன் விளைவே இந்த நூல்.
இந்நூல் வெளிவரக் காரணமாக இருந்த திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்.தா.இரா.பாரிவேந்தர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். பல்கலைக் கழகத்தின் ஓரமைப்பான தமிழ்ப் பேராயத்தின் தலைவர், முனைவர் கரு.நாகராசன் மற்றும் தமிழ்ப் பேராயத்தினர் அனைவர்க்கும் எனது ஆரா நன்றியை அன்பிழைத்த உள்ளமுடன் அர்ப்பணிகின்றேன்.
தொல்காப்பியர் என்னும்;
“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும்”
முதுமுனைவர்
மு.பெ.சத்தியவேல் முருகனார்
Leave a Reply